
கச்சத்தீவைப் பற்றி பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன்பு, ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம் என்றும், அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து, அவரே கேட்க வேண்டியதாக உள்ளது என்றும், கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணியில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும். கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி என்றும், இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், கரூர் துயரத்தின் போது, அவர்கள் ஏன் வந்தார்கள், இவர்கள் ஏன் வந்தார்கள், இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை, இது அரசியல் தானே என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதலமைச்சரே, நான் கேட்கிறேன், கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை, வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை, ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை, அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


