
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக மூத்த நிர்வாகி பெங்களூரு புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருவதால் அக்கட்சி பலவீனம் அடைந்துள்ளது. இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் 2017ஆம் ஆண்டு இணைந்த நிலையில் ஒபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக வும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வாகி செயல்பட்டு வந்தனர். இவர்கள்தான் அதிமுக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இரட்டை இலை சின்னமும் வழங்கப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற தற்காலிக அமைப்பை நடத்தி வருகிறார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார்.
இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீது தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது, அவர் அறிவித்த வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்க கூடாது என தமிழக தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “இரட்டை இலை, அதிமுக விவகாரம் குறித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தந்த மனுக்கள் மீது 14 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மாநிலங்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, மாநிலங்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆக, இம்மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது, இதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. ஆனால், விளம்பர நோக்கங்களுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ச்சியாக வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார் என்கிறார்கள் அதிமுக அதிமுக தலைமைக்கழக வட்டாரங்களில் உள்ளவர்கள்.



