
வயிறு பிரச்சனை, அஜீரணம், சோர்வு போன்றவைகள் தீர இதோ ஒரு அற்புதமான சிறு தானியம். நமக்குச் சில சமயங்களில் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாமல் ஒரு வித அசாதாரண உணர்வு ஏற்படுவதுண்டு.
நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணிக்கவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கவும், ஜலதோஷம், ஆஸ்துமா போன்றவை நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் என்பது சிறு தானியவகையைச் சேர்ந்தது. இப்பொழுது மழைக்காலம் ஆதலால் நம் அனைவரும் அதாவது சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவை வருவது சகஜம்.

அதைச் சரி செய்ய நாம் ஓமம் பயன்படுத்தலாம். வயிறு மந்தமாக இருந்தால் ஜீரணம் சரியாக இருக்காது அதோடு பசியும் எடுக்காது. வயிறு மந்தத்தை போக்க சித்திரமூல வேர்ப்பட்டை, சுக்கு, ஓமம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். அந்தப் பொடியில் கடுக்காய் பொடியைக் கலக்க வேண்டும். எப்போதெல்லாம் வயிறு மந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தப் பொடியைச் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிறில் ஏற்பட்ட மந்தம் நீங்கும். –
சிலருக்கு பசியே எடுக்காது வயிற்றில் ஏதோ கோளாறு இருக்கும். அப்படி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்துத் தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும். அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.

வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தால் ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருவது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியைச் சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்தப் பொடியைத் தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாகப் பசி எடுக்கும். ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவற்றை விரட்டவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓம பொடியை ஒரு துணியில் கட்டி அதை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
அதே போல ஓமப்பொடியை உச்சந்தலையில் தேய்த்தால் ஜலதோஷம் பறந்தோடும். ஓமம் தண்ணீர் குடிப்பது நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வீட்டில் எப்போதும் ஓமம் இருப்பது நல்லது. சப்பாத்தி மாவில் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் மணமாகவும் இருக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது.

