மோடிக்கு வழங்கப்பட்ட பிரசாதம்.. மேற்குவங்கத்தில் ‘மீன்’ அரசியல்.!

Advertisements

மேற்கு வங்க மாநிலத்தின் பூகோள ரீதியானக் காரணங்களால் அங்கு மீன்கள் உற்பத்தி அதிகம். இதனால், அம்மாநில மக்களின் ஆன்மிக நம்பிக்கையிலும் இடம்பெற்ற மீன் உணவை பிராமணர்களும் உண்பது உண்டு.இதன் காரணமாக, சட்டப்பேரவைப் பிரச்சாரத்தின் இடையே, மீன் விவகாரத்தை முன்வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, பாஜகவின் வேட்பாளர்கள் கைகளில் மீன்களுடன் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய தொடங்கினர்.

பிரதமர் மோடியும் மீன் அரசியலை கையில் எடுத்தார். மீன் உற்பத்தியில் மம்தா அரசு போதிய கவனம் செலுத்தவில்லை எனப் புகார் கூறினார். இதன் காரணமாக, பாஜக மற்றும் டிஎம்சி ஆகிய இரு கட்சிகளின் பிரச்சாரங்களில் மீன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஹல்தியாவின் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தின் மீன் வளத்தை முறையாகப் பராமரித்து வளர்ப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து விட்டது.

மம்தா ஆட்சியில் மீன் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. அதேசமயம், பிஹாரில் மீனவர்களின் நலனுக்காக பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, அங்கு மீன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது. இங்கு மீன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தபோதிலும், அதற்கான உற்பத்தியைப் பெருக்குவதில் மம்தா அரசு முயற்சிக்கவில்லை. இதன் காரணமாகவே, மேற்கு வங்க மாநிலம் பிற மாநிலங்களிடமிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் மீன் விநியோகத்தை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் மம்தா அரசு எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால், மேற்கு வங்கத்தை மீன்வளம் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கும்.’என்று பேசியிருந்தார்.மீன் விவகாரத்தில் தன்னை விமர்சித்த பிரதமர் மோடிக்கு பதிலடி அளிக்கும் வகையில் வடக்கு 24 பர்கானாவின் அகர்பாராவில் மம்தா பானர்ஜி பேசுகையில், ’பிரதமர் மோடி வைக்கும் மீன் மீதானக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது.

பிஹாரில் மீன் உற்பத்தி உண்மையில் அதிகரிக்கவில்லை. மாறாக அங்கு மீனுக்கான தேவை குறைந்துவிட்டதே இதற்குக் காரணம். பாஜக அரசின் செயல்பாடுகளாலேயே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் உள்ள மக்களை மீன் சாப்பிடவே நீங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கே, நாங்கள் சந்தைகளில் மீன் வாங்கிச் சாப்பிடுகிறோம். முன்பு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்து வந்தோம். தற்போது அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது.

பிரதமர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ராஜஸ்தான், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மக்களை மீன், முட்டை மற்றும் இறைச்சி சாப்பிட நீங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. வங்காள மக்களுக்கு மீன் சாப்பிடுவது எப்படி என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். பாஜகவினர் உங்களை மீன் சாப்பிட விடமாட்டார்கள். நீங்கள் இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது, வங்காள மொழியில் பேச முடியாது.

மீறிப் பேசினால், உங்களை ‘வங்கதேசத்தவர்’ என்று முத்திரை குத்துவார்கள்.’ என்று மோடிக்கு பதிலடி கொடுத்தர். இதற்கிடையே, மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார், ’பாஜக ஆட்சிக்கு வந்தால், மீன் உண்ணும் பழக்கமுடைய ஒருவரே மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறினார். வரும் 29ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேற்கு வங்கத்தில், வங்காளத்தின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த அரசியல் சச்சரவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26ம் தேதி கொல்கத்தாவின் தந்தானியா காளிபாரி கோயிலுக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், அசைவப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இத்தகைய, அரிதான பாரம்பரியத்திற்காகப் பெயர் போன சூழலில், பிரதமர் மோடி இந்தக் கோயிலில் ஆசி பெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.தந்தானியா காளிபாரி, கொல்கத்தாவின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. இங்கு காளி தேவி, சித்தேஸ்வரி தேவியாக வழிபடப்படுகிறார். மேலும், இங்கு நடைபெறும் நீண்டகால சடங்குகள் தொடர்ந்து பக்தர்களை ஈர்த்து வருகின்றன.

இந்தியாவில் கடவுளுக்கு அசைவப் பிரசாதம் வழங்கப்படும் சில கோயில்களில் தந்தானியா காளிபாரியும் ஒன்றாகும். இங்கு, தேங்காயில் வேகவைத்த இறால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தின் ஷ்யாம்புகூரில் தங்கியிருந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டார். அப்போது, பக்தர்கள் அவர் குணமடைய வேண்டி காளிதேவிக்கு அசைவப் பிரசாதம் படைத்தனர். அதுவே, இன்றும் பின்பற்றப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மீன்களுக்கு மோடி தடைவிதிப்பார் என்ற மம்தாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்விதத்திலேயே அசைவ பிரசாதம் வழங்கும் இந்த கோவிலுக்கு மோடி சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கொல்கத்தாவிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பிரதமர் மோடி மேற்கொண்ட சிறு பயணங்கள், மக்களைச் ஈர்ப்பதாகவே அமைந்தது. தந்தானியா காளிபாரிக்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் மோடி வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மத்துவா தாகூர்பாரியில் பிரார்த்தனை செய்தார். இது, பாஜகவின் முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றான மத்துவா சமூகத்தை கவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தச் சமூகம், வங்கதேச எல்லையை ஒட்டிய சில தொகுதிகள் உட்பட, குறைந்தது 50 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே, இந்த சமூக மக்களை கவரும் வகையில், மோடி மத்துவா தாகூர்பாரியில் பிரார்த்தனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *