
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையினால் நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது வடகிழக்குப் பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியது. இதன், தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியது. இதன், காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும். தொடர்ந்து, நாளை காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.



