பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு தண்ணீர் திறப்பு!

Advertisements

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்துத் தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

ஏரியின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 12-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் மதகுகள் வழியாகக் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அதன் பின்னர் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. தற்போது பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மா பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 380 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு கடலில் கலந்து வருகிறது.

இதையடுத்து பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் திறந்து விட நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலைப் பூண்டி ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய் வழியாகச் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விட்பபட்டது.

மதகுகள் வழியாகக் கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 3.645 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.33 அடியாக உள்ளது. 3.205 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடும் மதகு பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *