
விழுப்புரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தினை அனுபவிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரண்டு நபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் 50,000 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புவழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்ணாரம்பட்டு கிராமத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் அரசு பொறம்போக்கு நிலத்தை அனுபவிப்பது தொடர்பாகக் கடந்த 04.11.2005ஆம் ஆண்டு குலசேகரன், காத்தவராயன் ஆகியோருக்கும் நக்கீரன், கோவிந்தராஜ், சிவபுஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, தமிழ்ச்செல்வன், கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன், தமிழ்மணி, பழனிவேல், தமிழ்ச்செல்வன், அருள், அர்ஜுனன், கண்ணன் உள்ளிட்ட 26 நபர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது, அப்போது நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நக்கீரனும், சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
இதில் சேகர் என்பவருக்கு இறந்து போன குலசேகரன் ஆதரவாக இருந்ததாகவும் இதனையும் விரோதமாகக் கொண்டு சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் குலசேகரன், காத்தவராயன் ஆகிய இரண்டு நபர்களை மேற்கண்ட 26 நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, வழக்கு விசாரணை முடிவுற்று இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி ராஜசிம்மவர்மன், நக்கீரன், கோவிந்தராஜ், சிவபுஷணம், மோகன், சபரிநாதன் உள்ளிட்ட 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் மொத்தமாகத் தல ஐம்பதாயிரம் ரூபாயென மொத்தம் 15 லட்சம் அபராதமும் விதித்து விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி ராஜசிம்ம வர்மன் பரபரப்பு தீர்ப்பினை வழங்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்மணி, பழனிவேல், தமிழ்ச்செல்வன், அருள், அர்ஜுனன், கண்ணன் வழக்கு நடந்து கொண்டிருந்தபொழுது உயிரிழந்து விட்டனர், இவர்களைத் தவிர்த்து மற்ற இருபது நபர்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். 20 நபர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டபோது கைதான நபர்கள் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடியே சென்றனர் அது மட்டுமின்றி செய்தி சேகரித்த செய்தியாளர்களையும் புகைப்படம் எடுக்க அனுமதிக்காமல் தாக்கம் முற்பட்டதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
(இந்த வழக்கில் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி நக்கீரன் திமுக கிளை கழக செயலாளர், கோவிந்தராஜ் வழக்கறிஞர், மோகன் என்பவர் காவலர், சபரிநாதன் என்பவர் பொதுப்பணித் துறை பனியாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

