Amit Shah:கருத்துக்கணிப்பை புறக்கணித்த காங்கிரஸ்..அமித்ஷா கிண்டல்!

Advertisements

புதுடில்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனைக் கிண்டல் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயந்து ஓடாதீர்கள் எனக்கூறியுள்ளார்.

லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று( ஜூன்1) நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்குப் பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாகிறது. அதற்கு முன் டிஆர்பி., க்காக யூகங்கள் தொடர்பாகப் பேசுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. கருத்துக் கணிப்பு தொடர்பான எந்த விவாதங்களிலும் காங்கிரஸ் பங்கேற்காது. விவாதத்தின் நோக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஜூன் 4 முதல் விவாதங்களில் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனைக் கிண்டல் செய்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: படுதோல்வி அடையப் போவதை காங்கிரஸ் உணர்ந்து கொண்டு உள்ளது. எனவே, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊடகத்தையும், மக்களையும் அக்கட்சி பார்க்கும். இதனால், கருத்துக்கணிப்பிலிருந்து அக்கட்சி பயந்து ஓடுகிறது. பயந்து ஓடாமல், தோல்வியை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நான் அந்தக் கட்சியைக் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: பொம்மை பறிக்கப்பட்ட குழந்தையைப் போல், இந்தியாவின் பழமையான கட்சி நடந்து கொள்வது சரியல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் பெரிய அரசியல் கட்சியிடமிருந்து அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன் எனக்கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ‛இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? கருத்துக்கணிப்பில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறியதன் மூலம் ‛ இண்டியா ‘ கூட்டணியும், காங்கிரசும் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளன. மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பாரென அக்கட்சிகளுக்கு தெரியும் எனக்கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *