Vikravandi byelection:வாக்குப்பதிவு நிறைவு.. 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்குக் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாகப் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையெனக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2,651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் மொத்தம் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *