
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காகச் சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 900 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களைச் சந்தித்து பேசத் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஏகனாபுரம் கிராம மக்களைச் சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.
இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பரந்தூர் மக்களைச் சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ள காவல்துறை, 2 இடங்களில் எங்குப் பொதுமக்களைச் சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் கூட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
