
புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் டிப் டாப் ஆசாமி ஒருவர் செல்போனில் லிஸ்ட் போட்டு உயர் ரக பொருளைத் திருடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
புதுச்சேரி நகர பகுதியான அரவிந்தர் வீதியில் அமைந்துள்ளது அருண் காஸ்ட் பிரைஸ் ஷாப், நகர பகுதியில் உள்ள பல தரப்பட்ட மக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று டிப்டாப் ஆசாமி ஒருவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே செல்வதற்கு முன் வாசலில் வைத்திருந்த கால் மிதியடிகளை தரம் பிரித்துத் திருடுவதற்காக எடுத்து வைத்துவிட்டு அதன் பின் கடையின் உள்ளே சென்றவர் செல்போனில் என்னென்ன பொருட்களைத் திருட வேண்டும் என்று லிஸ்ட் போட்டு வந்ததை எடுத்துப் பார்க்கிறார்.
அந்த லிஸ்டின் படி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள உயர்ரக அதாவது முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உயர் ரக உலர் பழ வகைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூடையில் போட்டு என்னமோ காசு கொடுத்து வாங்குவது போல் அவர் செய்த அலப்பரைகளோ ஏராளம்.
கூலாகத் திருடிய அந்த நபர் திருடிய பொருட்களைத் தன் கையில் வைத்திருந்த கைப்பையில் ஒவ்வொன்றாகப் போட்டு அதை மறைத்து விடுகிறார். அதன் பின் அங்கிருந்து வெளியே செல்ல முயற்சி செய்யும்போது கடைக்காரர்கள் தன்னை நோட்டமிடுகிறார்களா என்பதை பார்க்கச் செல்போனை காதில் வைத்துக் கொண்டு பேசுவது போல் நடித்துக் கொண்டு கதவின் அருகே வருகிறார்.
அப்போது கடைக்குள் வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளே நுழையும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நைசாக வெளியே சென்று விடுகிறார்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் உள்ளே திருடியதோடு விட்டுவிடாமல் வெளியே அவர் தரம் பிரித்து வைத்திருந்த அந்தக் கால்மிதிகளையும் நைசாக எடுத்துக் கொண்டு மீண்டும் கூலாகப் போன் பேசிக் கொண்டே காசு கொடுத்துப் பொருட்களை வாங்கியவர் கூடக் காட்டாத பந்தாவோடு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் பாவம் அவருக்குத் தெரியவில்லை கடையைச் சுற்றி முப்பதுக்கு மேற்பட்ட கேமரா உள்ளது என்று.
ஆனால் அதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால் கடையின் உரிமையாளர் கூறும்போது…
தான் இது சம்பந்தமாகப் புகார் கொடுக்க விரும்பவில்லை இந்த வீடியோவைப் பார்த்து இவன் குடும்பத்துடன் அசிங்கப்பட வேண்டும், அப்போதாவது இவன் மற்ற கடைகளில் திருடுவதை நிறுத்த வேண்டும் திருந்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

