
கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு தளங்கள் , அருவிகள் போன்ற அதிகமான இடங்களுக்கு மக்கள் கூடுகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதில் பலர் சிக்கி தவிக்கின்றனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கானோர் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று பொழுதை கழிக்கின்றனர். மேலும் தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து அதிகமானோர் இங்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஏராளமானோர் ரவுண்டு சென்றனர். அப்போது ராட்சத ராட்டினத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதில் சென்ற 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக ராட்டினத்தில் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ராட்டினத்தில் தவித்து வருவோரை விரைந்து சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராட்சத ராட்டினத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 70 அடி உயர ராட்டினத்தில் சிக்கிய 30 பேரில் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 மணிநேரமாக சிக்கி தவிக்கும் மக்களை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.



