
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24-ஆம் தேதி மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 எனப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடந்த 100 ஆண்டுகளில் அந்த நாடு கண்டிராத மிக மோசமான பாதிப்பாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 774 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 67.6 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடரில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வந்துள்ள நிலையில், இந்திய அரசு ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Operation Amistad) எனும் மனிதாபிமான மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இதன்படி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினரை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “இந்தியா அனுப்பி வைத்த நிவாரண உதவிகள் வெனிசுலாவை சென்றடைந்துள்ளன. இந்த மனிதாபிமான உதவி, அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்குப் பெரும் வலுசேர்க்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிவாரணப் பணிகள் குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் இருந்து வெனிசுலாவின் கராகஸ் நகருக்கு, இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் III ரக விமானங்கள் 14,000 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தைக் கடந்து, 23 மணி நேர இடைவிடாத சவாலான பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன. ஒரு பொறுப்பான சர்வதேச மீட்பாளராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் இருக்கும் இந்தியாவின் கடமையை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில் வெனிசுலா மக்களுடன் இந்தியா தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



