ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால், அந்தத் துயரச் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் சென்னைக்கு வரவழைத்து மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது கரூர் பயணத்தின்போது, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் வைத்து முதலமைச்சர் விஜய்யிடமே 2 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இடையில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை, தேர்தல் முடிந்த பிறகு கடந்த 11-ஆம் தேதி முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் 4 காவல் அதிகாரிகள் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சரின் கரூர் பயணம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *