VelloreKidnap:வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை கர்நாடகாவில் மீட்பு!

Advertisements

வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையைத் தனிப்படை போலீஸார் இன்று கர்நாடகாவில் மீட்டனர். குழந்தை கடத்தல் கும்பலும் பிடிபட்டது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் – சின்னு. கடந்த 27-ம் தேதி இரவு பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னுவுக்கு மறுநாள் விடியற்காலை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டார். இந்த நிலையில், நேற்று காலை 7:15 மணியளவில் சின்னுவின் கணவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் வெளியே சென்றதாகத் தெரிகிறது.

சின்னு சாப்பிடும்போது, முன்பின் தெரியாத பெண் ஒருவர், அவரிடம் சென்று பேச்சுக்கொடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். சின்னுவும் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவிக்கொண்டு வந்த நேரத்தில் குழந்தையுடன் அந்தப் பெண் மாயமானார்.

தகவலறிந்ததும், வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் பை ஒன்றை கையில் சுமந்தபடி பெண் ஒருவர், சிறுவனுடன் அவசர அவசரமாக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்வது பதிவாகியிருந்தது.

அந்தப் பெண் கொண்டு சென்ற பையில்தான் குழந்தையும் இருந்தது எனப் போலீஸார் உறுதி செய்துகொண்டனர். இதையடுத்து, டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாகத் தேடிய நிலையில் 24 மணி நேரத்துக்குள்ளாகக் கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகே குழந்தை மீட்கப்பட்டிருக்கிறது.

குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணையும், கடத்தலுக்கு உதவிய சிக்மகளூரைச் சேர்ந்த மேலும் 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அந்தப் பெண் வேலூர் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்பதும், சிக்மகளூரில் ஒரு வீட்டில் வேலைப் பார்ப்பதாகவும், வீட்டு உரிமையாளருக்குக் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வந்திருக்கின்றன. எனினும், பிடிபட்ட கடத்தல் கும்பலைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், வேலூருக்கு அவர்களை அழைத்து வருகின்றனர். அதன் பிறகே கடத்தலுக்கான காரணங்கள் தெரியவரும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *