Lok Sabha Elections 2024: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள்!

Advertisements

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோவையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிமுக, திமுக நேரடியாகக் களம் கண்ட இத்தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால், ஸ்டார் தொகுதியாக மாறியது கோயம்புத்தூர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தத் தொகுதியைக் கைப்பற்றியே ஆக வணேடும் என முழு வீச்சில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியது. அதேபோல், அதிமுகவின் கோட்டையாகவும் கோயம்புத்தூர் பார்க்கப்படுவதால், அக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான வேலுமணியின் சொந்த தொகுதி என்பதால் அதிமுகவும் வரிந்து கட்டியது. இரண்டு கட்சிகளும்  போட்டிப் போட்டுக்கொண்டு தேர்தல் பணிகளைச் செய்ய, பாஜக தலைவர் அண்ணாமலை இவர்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆனால், கோயம்புத்தூர் களத்தில் திமுகவும், அதிமுகவும் தான் இருப்பதாகவும் பாஜக களத்திலேயே இல்லையெனச் சவால் விட்டார் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி. அவர் தன்னுயை வெயிட்டை காண்பிக்க வேண்டும் எனச் சிங்கை ராமச்சந்திரனுக்காக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்தார். அதேவேகத்தில் திமுகவும் களத்தில் பணியாற்றியதால் பாஜகவின் அண்ணாமலைக்கு போட்டி என்பதை விட அவருக்கு மூன்றாவது இடமே மிஞ்சும் என்ற நிலை உருவானது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தங்களின் தொடர் பிரச்சாரங்களிலும் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் என்பதை திரும்பத் திரும்பக் கூறி வந்தனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்களித்தபிறகு பேசிய எஸ்பி வேலுமணி, அதிமுக இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றும், மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நிலையில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தாங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆனால், அதிமுகவின் பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் மிகப்பெரிய சுணக்கம் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. தேர்தல் களத்தில் பிரச்சாரத்தின்போது வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்த்த அதிமுக, முக்கிய நாளான வாக்குப் பதிவு நாளில் எதிர்பார்த்த அளவுக்குக் களத்தில் செயல்படவில்லை. பல இடங்களில் அதிமுக பூத்களில் ஆளே இல்லை. பாஜகவின் பூத்களில் அதிமுகவினரை பார்க்க முடிந்தது. இங்குத் தான் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குபதிவு நாளில் கோவை தொகுதியில் அதிமுக தீவிரமாகப் பணியாற்றாதது ஏன்?, மேலிடத்திலிருந்து ஏதேனும் மறைமுக அழுத்தம் வந்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தெரியும் என்கிறது அரசியல் வட்டாரம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *