
வேலூர்க் கோட்டை (Vellore Fort); வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூர் கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.
அமைப்பு;
கருங்கல்லால் மட்டுமே கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரே ஒரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இங்கு மியூசியமும் அமைந்துள்ளது.

சிறப்பு;
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது. மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் 1999 ஏப்ரல் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
வரலாறு;
நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாக ஆங்கிலேயருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை இக்கோட்டை ஆங்கிலேயர்களிடமே இருந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் இக்கோட்டையில் திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர். திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர். இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

இது மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகும். கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் சுற்றுலா பயணிகள் போட்டிங் செல்கின்றனர். மேலும் கோட்டையின் முன்புறம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு கூடுவர். இக் கோட்டையின் கூரை மேல் நின்று பார்த்தால் ஊரே தெரியும். அதுமட்டுமல்ல ஆங்காங்கு மாடங்கள் உள்ளது.
மாடங்கள் மீது நின்று தான் வீரர்கள் பகைவர்களின் வருகையை தொலைநோக்கி மூலம் பார்ப்பார்கள். சிறிதும் கலவை ஏதும் இல்லாமல் கருங்கற்கள் மட்டுமே வைத்து கட்டப்பட்டு இருப்பது கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த சாட்சியாகும்.
அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் ஆரணி கோட்டை அமைந்துள்ளது. அங்கும் சத்திய விஜய நகரம் உள்ளது. அங்கேயும் கோட்டை உள்ளது. வேலூர் செல்பவர்கள் அப்படியே கோட்டையையும் பார்க்க செல்வார்கள்.
சென்னையிலிருந்து பல பேருந்துகள் செல்கின்றன. மேலும் ரயில் போக்குவரத்தும் உள்ளது. ரயில் மூலம் சென்றால் காட்பாடி ரயில் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலமாக செல்லலாம்.


