
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு வன உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் செயல்படும் கடைகளுக்கும் கடுமையான நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, மலையேற்றம் தொடங்கிய நாளன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சில கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்துவதையறிந்த அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சிவ கணேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, மலையேறும் பக்தர்களுக்கும், மலையடிவார கடைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் மலை வளம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மலையேற்ற காலத்தில் பக்தர்கள் வீசிய சுமார் 12 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன என்றும் இந்த ஆண்டு அதே நிலை உருவாகாமல் தடுக்கவே பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


