
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைத் தவிர, தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக செயல்பட்டார். காவிரி நீர்ப்பிரச்சினை, நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கேரள தரப்பின் பிரச்சினைகளை முன்வைத்து பேசிய முதலமைச்சர் வி.டி. சதீசன், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார். புதிய அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என அவர் முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை கேரள அரசு ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அணை கட்டப்பட்ட பின்னர், தமிழ்நாட்டிற்கு உரிய முழுப் பங்கு நீரையும் கேரளம் தொடர்ந்து திறந்து விடும் என்றும் சதீசன் தெரிவித்துள்ளார். மேலும், பழைய முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்திற்கு இரு மாநிலங்களும் இணைந்து, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சதீசன் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் அணையின் பாதுகாப்பு தொடர்பான கேரளத்தின் கவலைகளுக்கும், தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.



