
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான இறுதிநாள் மே 28ஆம் நாளாகும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை https://www.tngasa.in என்ற இணையத்தள முகவரியில் மே ஏழாம் நாள் முதல் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் பட்டியலினத்தவருக்கு இரண்டு ரூபாய், மற்ற பிரிவினருக்கு 50 ரூபாய் ஆகும்.
இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



