வத்தலகுண்டு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியேட்டரில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, கோம்பைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம்.இவரது மகன் ஆனந்த் (21) பிஎஸ்சி படித்து வருகிறார். கல்லூரி மாணவரான இவரது உறவினர் ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த, அழகுமணி மகன் பிரவீன்குமார் (17) இருவரும் இருசக்கர வாகனத்தில், வத்தலக்குண்டுவிலிருந்து, கோம்பைபட்டிக்கு செல்லும் வழியில், வத்தலகுண்டு அடுத்த, வெங்கடாஸ்திரிகோட்டை என்ற இடத்தில், பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்டர் மீடியேட்டரில் மோதிப் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்சில், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த, பிரவீன்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகன விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
