மிளகு, பலா, காபி பயிர்களை ஆக்கிரமித்த வத்தல் மலை!
சின்னக் கொடைக்கானல் என்றழைக்கப்படும் வத்தல் மலை தருமபுரி மாவட்ட நகரிலிருந்து கிழக்குப் புறமாகப் பார்த்தால் ஓர் அரணைப் போலப் படர்ந்திருக்கும் மலைப் பகுதி ஆகும். நகரிலிருந்து மொத்தமாக 25 கி.மீ. தொலைவும், அடிவாரத்திலிருந்து 16 கி.மீ வனத் துறையின் மலைச்சாலையையும் கொண்டது. 23 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மழைக்காலத்தில் அடிக்கடி சரிவுகளைக் காணும் ஓரிரு வளைவுகள் இன்னமும் அப்படியே உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரமான மலைமேல் சிறியதும் பெரியதுமாக 11 கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, நாய்க்கனூர் ஆகியவை பெரிய ஊர்கள். மொத்தமாக 1300 குடும்பங்கள் உள்ளன.
மலையாளிகள் என்ற தமிழ் பேசும் பழங்குடி மக்கள் பூர்வீகமாக வசிக்கிறார்கள். கேழ்வரகு, சாமை, திணை போன்றவை பாரம்பரிய விவசாய விளை பொருள்கள். தற்போது அண்மைக்காலமாக மிளகு, பலா, காபி பயிர்களும் வத்தல்மலையை ஆக்கிரமித்துள்ளன.

பெரியூரில் வனத் துறையினரின் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு அருகேயே சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களுடன் கூடிய சிறிய குளம் ஒன்றும், பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிக் கட்டடமும் உள்ளன.
நகரப் பகுதி மற்றும் பொம்மிடிப் பகுதி அடிவாரங்கள் வரை 6311 ஹெக்டேர் பரப்பளவு வனத் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ளது. இவையன்றி, ஊர்ப் பகுதிகள், விவசாய நிலங்கள் தவிர்த்து வருவாய்த் துறைப் புறம்போக்கு நிலமும் உள்ளன.

பெரியூரிலிருந்து தருமபுரி நகரைப் பார்க்கும் வகையிலும், நாய்க்கனூர் பகுதியில் பொம்மிடி நகரைப் பார்க்கும் வகையிலும் காட்சி முனைகள் அமைக்கத் தக்க அருமையான} இயற்கையான வசதி கொண்ட பகுதிகள் உள்ளன.பெரியூரில் ஒரு தொடக்கப் பள்ளியும், பாலம் சிலம்பில் ஒரு நடுநிலைப் பள்ளியும், சின்னாங்காட்டில் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளன.
ஒகேனக்கல் மட்டுமே தருமபுரியின் சுற்றுலாத்தலம் என்று பலராலும் கருதப்பட்டு வந்த நிலையில், இன்னமும் பசுமை மாறாமல் எழில் கொஞ்சும் இடமாக வத்தல் மலை அமைந்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களின் மக்களும் கூட முழுமையாக இயற்கையை ரசிக்க வாய்ப்பு கிடைக்கும்.இப்படி அருமையான இயற்கையான வசதி கொண்ட பகுதிகளை ஒருமுறை சென்று பார்த்தால் மனதிற்கு இதம் தரும் என்பதில் ஐயமில்லை.

