Vaniyambadi Panchayat Council President: ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சிறைபிடிப்பு!

Advertisements

வாணியம்பாடியில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை சிறைப்பிடித்த பொதுமக்கள் அவரை வீதி வீதியாக அழைத்து சென்று தொகுதியின் அவல நிலையை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட கரிமாபாத் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட எந்த வகையான அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திடீரென கரிமா பாத்துக்கு செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவர் தனஞ்செயனை சிறைபிடித்த அப்பகுதி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிமுக பெண் தலைவரின் கணவரை சிறைபிடித்த பொதுமக்கள் அவரை வீதி வீதியாக அழைத்துச் சென்று தெருவில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதையும் மற்றும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த கால்வாயை காண்பித்தும், சுத்தம் செய்யப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை காண்பித்தனர்.

தொடர்ந்து இந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தமலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *