Valangaiman: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Advertisements

பட்டாசு கடையில் தீ விபத்தின்போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 48 பட்டாசு கடைகளும், 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு திருவாரூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வலங்கைமானில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில், இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பின்புறம் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த பகுதியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து தகவலறிந்து வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த தீ விபத்தின்போது கடையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *