Thiruvarur: மூதாட்டியை 6 வருடங்களாகச் சிறை வைத்த வாலிபர்!

Advertisements

சொத்துக்காக 6 ஆண்டுகளாக மூதாட்டி சிறை வைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கத் திருவாரூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவளாகம் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம். இவருக்கு வயது 65. இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டார். இவர்களுக்குக் குழந்தைகள் ஏதுமில்லை. ஜெயம் பெயரில் பல சொத்துகள் இருந்து வருகிறது. வாரிசு இல்லாத காரணத்தால், கணவர் இறந்த பிறகு மூதாட்டி ஜெயத்தை அவரது உறவினர்கள் உணவு கொடுத்துப் பராமரிப்பது போல இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே, சொத்துக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை 6 வருடங்களுக்கு முன்பு எங்கும் செல்லாத வகையில் பராமரித்து வந்த அவரது உறவினர் சிவசுப்பிரமணியன், மூதாட்டி ஜெயத்தை சிறு அறையில் அடைத்து வைத்து, வீட்டைப் பூட்டி சிறை வைத்து விட்டு, ஜன்னல் வழியாகச் சாப்பாடு கொடுத்துச் சித்ரவதை செய்து வந்துள்ளார். 6 வருடங்கள் கடந்த நிலையில் மின்சாரம் இல்லாமல், குடிநீர் வசதி ஏதும் இல்லாமல், ஜன்னல் வெளிச்சத்தில் பூட்டிய வீட்டில் அடைக்கப்பட்டதால் சரியான உணவு இல்லாமல் உடம்பில் உடை இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கேயே இயற்கை உபாதைகளைக் கழித்தும் அதே இடத்தில் மூதாட்டி உறங்கி வந்துள்ளார். கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து உடல் மெலிந்து எலும்புக்கூடு போல் மூதாட்டி காணப்பட்ட வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூதாட்டி ஜெயம் பற்றிச் செய்தி வெளியான நிலையில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

மூதாட்டியை மீட்டு பாதுகாப்பாகக் காப்பகத்தில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்துள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தில்லைவளாகம் கிராமத்தில் காவல்துறையினரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினரும் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *