T.V.K. Conference:நடக்குமா? – காவல்துறையின் 21 கேள்விகளுக்கு நாளைக்கு பதில்!

மாநாடு நடத்துவது குறித்து தமிழக வெற்றிக்கழகத்திடம் விக்கிரவாண்டி காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது.

விக்கிரவாண்டி:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.

கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார். தொடர்ந்து வரும் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை மாவட்ட எஸ்.பி.யிடம் த.வெ.க கோரியுள்ளது.

மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார், கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர். மாநாடு எப்போது தொடங்கி எப்போது முடியும்? மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம் என்ன? மாநாடு மேடையின் அளவு என்ன? மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்துகொள்கின்றனர்? மாநாட்டில் யாருடைய தலைமையில் வருவார்கள்? மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட 21 கேள்விகள் த.வெ.க.விடம் காவல்துறை கேட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி, காவல்துறையின் கேள்விகளுக்கும் நாளைக்கு பதில் அளிக்கப்படும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *