V. Senthil Balaji Case: 3 ஆவது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி!

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கச் சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது எனக் கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், மருத்துவ ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுமீது ஜனவரி 12ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுமீது தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து, அவரது  ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 3ஆவது முறையாகத் தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக, வருகிற 22ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகையை அவர் சிறையிலேயே கழிக்க வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *