சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்…
சென்னை: ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர்மீது கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதற்கான நகலும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்தது.
இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அப்போது அங்கு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஜாமின் மனுவை அவர் ஏற்க மறுத்துவிட்டார். தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்றமும் அதனை ஏற்க மறுத்ததால், செந்தில் பாலாஜி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, ஜாமின் வழக்கு மட்டுமின்றி, சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திலேயே நடத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாகச் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று ஓய்வு நிலையில் இருக்கிறேன். விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உடல் நிலையைக் கருத்தில்கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அச்சமயம், பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, குறுகிய நாட்களே ஒத்திவைக்க வேண்டுமெனச் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர்.அருண்குமார் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் வழக்கின் விசாரணை என்பது வருகின்ற 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


