இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் நியமனம் – முதல்வர் வாழ்த்து!

Advertisements

சென்னை: 

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது சமூகவலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ள வாழ்த்தில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யானென உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்ரோவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சி., யின் (LPSC) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *