
சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மாற்று வழியில் மீட்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
உத்தர்காசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 2வது நாளாகத் துளையிடும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் 4.5 கிமீ சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12ம் தேதி திடீரென இடிந்ததில், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
முதல் கட்டமாக, சுரங்க இடிபாடிபாடுகளில் 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 6 அங்குல குழாயை நுழைத்து அதன் மூலமாகத் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதன் வழியாகக் கேமராவை அனுப்பி, தொழிலாளர்களின் உறவினர்களைப் பேச வைத்து அவர்கள் பத்திரமாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, சுரங்கத்தில் கிடைமட்டமாகத் துளையிட்டு 45 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 800 மிமீ அகல குழாய் வெற்றிகரமாக உள்ளே செலுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங், தேசிய பேரிடர் மீட்பு குழு இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் ஆகியோர் சுரங்கப்பகுதியை பார்வையிட்டனர்.மறுபுறம், மீட்கப்படும் தொழிலாளர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். மேலும், 41 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மாற்று வழியில் மீட்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாற்று வழியில் மீட்புப் பணிகளைத் தொடங்குவது குறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்பகுதி வரை துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

