‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ்..!

Advertisements

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கியப் பங்களிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கருத்திற்கொண்டு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழலாளர்கள், பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மிகை ஊதிய உச்ச வரம்பைத் தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8 புள்ளி மூன்று மூன்று விழுக்காடு மிகை ஊதியமும், 11 புள்ளி ஆறு ஏழு விழுக்காடு கருணைத் தொகையும் என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம், பாலுற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8 புள்ளி மூன்று மூன்று விழுக்காடு மிகை ஊதியமும், 1 புள்ளி ஆறு ஏழு விழுக்காடு கருணைத் தொகையும் என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னைக் குடிநீர் வழங்கல் வாரியம் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு 10 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பணியாளர்களுக்கு 8 புள்ளி மூன்று மூன்று விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும். மொத்தத்தில் 376 கோடி ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *