திருப்பதியில் ஜட்டி கேங் கும்பலால் பொதுமக்கள் அச்சம்!
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ஜட்டி கேங் கும்பலால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திராவின் மிகவும் முக்கியமான நகரமாக மட்டுமின்றி, உலகின் பிரசித்தி கோயிலாக திருமலை அமைந்திருப்பது திருப்பதி ஆகும். திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நாட்டின் பல நகரங்களில் இருந்து தினசரி லட்சம் பேர் வந்து செல்லும் திருப்பதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாகவே இருக்கும். கோயில் மட்டுமின்றி கோயில் அமைந்துள்ள நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே இருக்கும்.
இந்த நிலையில், திருப்பதியில் காவல்துறையினருக்கு சவால் அளிக்கும் விதமாக ஒரு கொள்ளை கும்பல் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கொள்ளை கும்பலுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதாவது, தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொள்ளையடிப்பதில் விதவிதமான பாணியை ஒவ்வொரு கும்பலும் பின்பற்றும். அந்த வகையில், திருப்பதியில் இப்போது புதியதாக உலா வரத் தொடங்கியுள்ளது ஜட்டி கேங்.
இந்த கும்பல் தாங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்றும், எந்த தடயமும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும் ஆடைகள் எதுவுமின்றி இடுப்பிற்கு கீழே வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இந்த கும்பல் தாங்கள் கொள்ளையடிக்கும் இடத்தையோ, வீட்டையோ முன்கூட்டியே நோட்டமிட்டு கொள்கின்றனர். பின்னர், நள்ளிரவு நேரத்தில் திடீரென தாங்கள் திட்டமிட்ட வீட்டிற்கு சென்று கதவை தட்டுகின்றனர்.
அந்த வீட்டில் இருப்பவர்களும் நள்ளிரவில் யாரோ கதவை தட்டுவதால் பதறிக்கொண்டு கதவை திறக்கின்றனர். அப்போது, அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் உள்ளே செல்லும் இந்த ஜட்டி கேங் அவர்களைத் தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடிப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் விதமாக யாரேனும் கதவைத் தட்டினாலோ, வித்தியாசமாக சத்தம் கேட்டாலே, குழாயில் இருந்து தண்ணீர் திறந்து கீழே சிந்துவதுபோல ஓசை கேட்டாலே யாரும் வீட்டின் கதவை திறக்க வேண்டாம் என்றும் ஆந்திர காவல்துறை எச்சரித்துள்ளனர்.
மேலும், விரைவில் இந்த புதிய வகை கொள்ளை கும்பலை கைது செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஜட்டி கேங் கும்பல் ஏற்கனவே ஹைதராபாத்திலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாகவும், இவர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக கொள்ளையடித்த வீடுகள் மற்றும் இடங்களில் இருப்பவர்களை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.