தீபாவளியை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் உளுந்தூர்பேட்டை மட்டும் தான் சுற்றுவட்டார பகுதிகளான கிளாப்பாளையம், ஆதனூர், ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதனை திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை மாநிலம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். வெள்ளாடு, செம்மறி ஆடுகள் இங்கு விற்பனை செய்யப்படும். மேலும், மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடு இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் இங்கு ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்தவுடன் சந்தையில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் ஆட்டுக்கறி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று நள்ளிரவு முதலே சந்தைக்கு வந்தனர்.
அதே சமயம் இன்று அதிகாலை 3 மணி முதல் ஆடுகளின் வரத்து தொடங்கியது. உடனடியாக ஆடுகளின் விற்பனை களைக்கட்டியது. சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், ஆட்டுக் கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் தங்களின் நண்பர்களுடன் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொடி ஆட்டினை வாங்கி சென்றனர்.
இவர்கள் வாங்கிய கொடி ஆட்டை, தங்களின் ஊருக்கு கொண்டு சென்று தீபாவளிக்கு முன்தினம் பங்கு போட்டு தீபாவளி நாளில் சமைத்து படையலிட்டு உண்பார்கள். இதற்காக பலரும் காரில் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, அதாவது காலை 7 மணிக்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வார சந்தை ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.