
இந்தியாவையே உலுக்கிய உஜ்ஜயினி சம்பவம், நிர்பயா சம்பவத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையானது.
அரை நிர்வானத்துடன் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம், ரத்தம் கசிந்த நிலையில், வீடு வீடாகச் சென்று உதவி கேட்டும் ஒரே ஒருவர் கூட உதவவில்லை. குடிக்க தண்ணீர் கூடக் கொடுக்கவில்லை. ஒரு சிலர் 50,100 எனப் பணம் போட்டுள்ளனர்.
இறுதியில் ஒரு ஆஸ்ரமத்தின் வாயிலில் நிற்க, அங்கிருந்த துறவி சிறுமிக்கு ஆடை, தண்ணீர் கொடுத்து அவசர ஊர்தி வரவழைத்து அருகாமையில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உடனடியாக அவசர சிகிச்சை அச்சிறுமிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதால், காவலர்கள் கூட ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
அதே சமயம் இக்கொடூர சம்பவம்குறித்து உஜ்ஜயினி போல்சார் விசாரணை மேற்கொண்டனர், சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆட்டொ டிரைவர் ஒருவன் சிக்கினான். அவனை உடனடியாகக் கைது செய்த போலீசார் விசாரித்து வருவதோடு மேலும் பலரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் பெயர் பாரத் சோனி. இவன் விசாரணயின்போது தப்பிச்செல்ல முயன்றபோது அவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆட்டோ டிரைவர் பாரத் சோனியின் அப்பா, தன்னுடைய மகனைத் தூக்கிலிட வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சொல்லும்போது, “என்னுடைய மகன் செய்தது வெட்கக்கேடான செயல். என்னுடைய மகனைச் சந்திக்க மருத்துவமனைக்கோ, போலீசுக்கோ கோர்ட்டுக்கோ நான் செல்லமாட்டேன். என் மகன் குற்றம் செய்து விட்டான். அதனால் அவனைத் தூக்கிலிட வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

