தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை டி.ஜி.பி. அளித்துள்ள பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அளித்துள்ள பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சிப் பிரமுகரைப் போல கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைவுதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் குற்றச் செயல்களே நடக்காதது போலவும், சட்டம் -ஒழுங்கு சீரும், சிறப்புமாக இருப்பது போலவும் அவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் அவர் எதிரே அமர்ந்திருப்பவர்களே வாய்விட்டு சிரித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரிக் கொலை எண்ணிக்கையை, நடப்பாண்டின் 10 மாதச் சராசரியோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? என்று வினவியுள்ளார்.
தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில் டி.ஜி.பி.யே கொலைகள் குறைத்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல, அது நிர்வாகத்தின் அவலம் என்று தெரிவித்துள்ளார். தவெகவால் பாதிக்கப்பட்டோர் வழக்குப் பிரிவு என ஒன்றை டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தொடங்கும் அளவுக்கு ஆளுங்கட்சியினர் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக டி.ஜி.பி. தனக்குத்தானே ‘சுயச்சான்றிதழ்’ கொடுத்துக்கொள்வது நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார். எனவே, புள்ளிவிவர வித்தைகளை விட்டுவிட்டு, மக்களின் உண்மையான பாதுகாப்பைக் களத்தில் உறுதி செய்ய காவல்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




