தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக காலியான சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இரு தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சார தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, செப்டம்பர் 25ஆம் தேதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் பகுதியில் சாலைவலம் சென்று வேனில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.

