வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில், பிரதமர் நரேந்திர மோடி, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா – பிரிட்டன் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் புதுமையான காலநிலை தீர்வுகளை ஊக்குவிப்பதிலும், உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியர்களின் புத்தாக்கத் திறனை வெளிப்படுத்துவதிலும் ‘எர்த்ஷாட் பரிசு’ மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும் ஆவலாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது நமது நாடுகளின் மக்களுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் பொதுவான செழிப்பை உருவாக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.




