NEET Exam: முட்டையைக் கையில் எடுத்த உதயநிதி!

Advertisements

செங்கலை தொடர்ந்து முட்டையைக் கையில் எடுத்த உதயநிதி!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவர் அணி செயலாளர் எழிலன், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நீட்  ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி இருந்தாலும், இதை மாபெரும் மக்கள் இயக்கமாகத்தான முன்னெடுத்து செல்ல வேண்டும். நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்துக் கிடக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் நீட் தற்கொலைகள் தொடர்கிறது.

நீட் வந்தால், தரமான மருத்துவர்கள் வருவார்கள். படிப்புக்குப் பணம் தேவையில்லை என்று சொன்னார்கள். ஆனால் தற்போது, முதுநிலை நீட் சேர, 0 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமாம். இதுதான் நீட் தேர்வின் நிலையெனக் கூறி, முட்டையொன்றை கையில் காண்பித்தார் உதயநிதி.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் மனநிலையே நீட் தேர்வுக்கு எதிரானது தான். 19 மாணவர்கள் இதுவரையிலும் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள்.  உரிமை கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம். கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று நீட்டுக்கு எதிரான குரலை அனைவரும் பதிவு செய்வோம்.  முதலில் கையெழுத்து இயக்கம் மூலமாக எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய இருக்கிறோம்.

அதற்கும் மத்திய அரசுச் செவி சாய்க்கவில்லை என்றால்,  ஜல்லிக்கட்டு போராட்டம்போல  எங்கேயாவது அமர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்வோம். இதை வெறும் திமுகவின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை” என்று  உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதிமுகவுக்கு அழைப்பு:

மேலும், “ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம். நீட் ரத்துக்கு சேர்ந்து போராட அதிமுகவும் வாருங்கள். அதற்கான பெயரை நீங்களே கூட எடுத்துக் கொள்ளுங்கள். நீட் ரத்தானால் போதும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஒன்றும் செய்ய இயலவில்லை என்றீர்கள். தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள். எனவே, நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *