Udhayanidhi Stalin: தலைக்கு விலை அறிவிக்கப்பட்டதுக்கு கண்டனம்!

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம்மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் கடை தொடர்பாகச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாகத் தவறாகக் கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு.

இதுகுறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 24 ம் தேதி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பூருக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு முதலமைச்சர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சனைகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாகத் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *