Neelankarai : விஜயின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு..!

சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயின் வீட்டிற்குள் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டிலிருந்த நடிகர் விஜய் மொட்டை மாடிக்குச் சென்றபோது, அருண் திடீரென விஜயைக் கட்டிப்பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அருணைக் கீழே அழைத்து வந்த நடிகர் விஜய், நீலாங்கரை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினரின் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அருண் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அருண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, விஜயின் வீட்டுக்கு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அருண் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் என்பது குறித்து நீலாங்கரை காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டில் சோதனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *