வெள்ளை மாளிகைக்குள் டிரம்பின் பதவியேற்பு விழா!

Advertisements

இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்குப் பதவியேற்பு விழா தொடங்கவுள்ளது. அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்பிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். டிரம்பைத் தொடர்ந்து, துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவர்களும், பெரும் தொழிலதிபர்களும் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 78 வயதான டொனால்டு டிரம்ப், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2-ஆவது முறையாக அதிபராகவுள்ளார்.

இதற்காக, வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் தயாராகியுள்ளன. வழக்கமாக வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், ஆராதனை, பதவியேற்பு, அதிபர் உரை, ராணுவ அணிவகுப்பு என அனைத்தும் வெள்ளை மாளிகையின் உள்ளரங்கிலேயே நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்பாக, 1985-ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் பதவியேற்கும்போது, கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து நிகழ்வுகளும் உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது.

மேலும், 2020-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து சூறையாடிய இடத்தில்தான் தற்போது டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்குப் பதவியேற்பு விழா தொடங்கவுள்ளது. அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்பிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். டிரம்பைத் தொடர்ந்து, துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்புக்குப் பிறகு நாட்டு மக்களுக்கான முதல் உரையில், அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள்குறித்து டிரம்ப் எடுத்துரைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ளவுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இதே போல, உலகின் பெரும் தொழிலதிபர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், உள்ளிட்டோருடன், டிக்டாக் சிஇஓ ஷோ ஸி செவ்-வுக்கும் (Shou Zi Chew) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜோ பைடனின் பதவியேற்பு விழாவை டிரம்ப் புறக்கணித்த போதும், இன்றைய விழாவில், தற்போதைய அதிபர் ஜோ பைடனும், டிரம்பிடம் தோல்வியடைந்த கமலா ஹாரிஸும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தனது மனைவியுடன் வாணவேடிக்கைகளைப் பார்த்து ரசித்த டிரம்ப், உற்சாகமாக நடனமாடினார்.

இதனிடையே, பதவியேற்புக்கு முந்தைய நாள் இரவு விருந்தில் அதிபராகவுள்ள டிரம்புடன், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது தவிர, இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களான கல்பேஷ் மேத்தா, பங்கஜ் பன்சால் உள்ளிட்டோரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *