
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், அதனை ஈரான் ஏற்க மறுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 3 நாட்களை கடந்து 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 80 நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ கமென்டர்கள் உயிரிழந்தனர். இதுவரை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்று ஈரான் கூறியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். மேலும், மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் ஓமனும், பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை அறிவுறுத்தின. ஆனால் இதனை ஏற்க ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பின்பு தான் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



