
குஜராத்தில் வைர கற்கள் தெருவில் கொட்டி விட்டன எனத் தெரிந்ததும், மக்கள் கும்பலாக ஒன்று கூடி கூட்டி, பெருக்கி தேடிய வீடியோ வைரலானது.
சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் வரச்சா பகுதியில் சிறிய பஜார் ஒன்று உள்ளது. இதில், அந்த வழியே நபர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில், வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்தப் பகுதி தெருவில் விழுந்து விட்டன எனத் தகவல் பரவியது.
இதனை அறிந்ததும், அந்தப் பகுதியில் கும்பல் கூடியது. அவர்கள் வந்த வேலையை விட்டு, விட்டுத் தெருவில் கிடக்கும் வைர கற்களைத் தேட தொடங்கினர். சந்தையில் இருந்த குப்பைகளை எல்லாம் சிலர் கூட்டி, பெருக்கி அலசினர். இதில், ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் கைகூடியது. சிலருக்கு வைர கற்கள் கிடைத்துள்ளன.
ஆனால் அதன்பின்னரே அவை அமெரிக்க வைரங்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், சுற்றியிருந்தவர்கள் தேடலைக் கைவிட்டனர். இதுபற்றித் தெருவில் வைரங்களைத் தேடியவர்களில் ஒருவரான பன்சேரியா என்பவர் கூறும்போது, ஒருவருக்கு வைரம் கிடைத்தது. ஆனால், அது ஒரு போலியான வைரம் என்று பின்பே தெரிந்தது.
அது அமெரிக்க வைரம். கவரிங் நகை அல்லது சேலையில் வேலைப்பாடுகள் செய்யப் பயன்படக்கூடிய வைரம் ஆகும். பொதுமக்களைக் கவர வேண்டும் என்பதற்காக எவரோ சிலர் பிராங்க் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளது போன்று தோன்றுகிறது என்று கூறினார். இந்தத் தேடல் சம்பவம்பற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

