தங்கம் தாறுமாறான ஆட்டம்.. ₹1.5 லட்சம் உச்சம்… ₹10,000 சரிவு..!

Advertisements

ஒரு காலத்தில் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு இருந்தது தெரியுமா? 2000-ம் ஆண்டு. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் 4,400 மக்களே
அப்போது தங்கம் என்பது பெரும்பாலும் திருமணம், விழாக்கள், சேமிப்பு என குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலை கீழாக மாறிவிட்டது.

2026-ல் தங்கம் ஒரு கட்டத்தில் 10 கிராமுக்கு 1.5 லட்சத்தைத் தாண்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் மனித வாழ்க்கையின் வளர்ச்சி பிள்ளையார் சுழிதான். அதாவது, 2000-ம் ஆண்டில் இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
அப்படியென்றால்… இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

இதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம் இல்லை. பல காரணங்களை அடுக்கடுக்காக  சொல்லாம்.

1. உலக பொருளாதாரம் முதல் போர் பதற்றம் வரை…

2. டாலர் மதிப்பு முதல் அமெரிக்க வட்டி விகிதம் வரை…

3. மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் முதல் இந்திய ரூபாயின் மதிப்பு வரை போன்ற பல காரணங்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன.

உலக நாடுகள் ஏன் தங்கத்தை வாங்குகின்றன?
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் கிடையாது. அது ஒரு  பாதுகாப்பான கையிருப்பாகவும் பார்க்கப்படுகிறது. உலகில் போர், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி செல்வார்கள்.

அதேபோல், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய கையிருப்பில் தங்கத்தின் அளவை அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, உலக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, சில நாடுகள் தங்களுடைய வெளிநாட்டு கையிருப்பை டாலரில் மட்டும் வைத்திருப்பதைக் குறைத்து, தங்கத்திலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் உலக சந்தையில் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரித்தால்… விலையும் உயர்கிறது!

அதுசரி இந்தியாவில் விலை இன்னும் அதிகமாக இருப்பது ஏன்?

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வது ஒரு காரணம். அதோடு இந்தியாவில் இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதுதான் ரூபாய் – டாலர் மதிப்பு.இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்தால், இந்தியாவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்ய அதிக ரூபாய் செலவாகும்.
இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பெரிய அளவில் மாறாவிட்டாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இன்னொன்னு இருக்கு போர் பதற்றம்… தங்கத்துக்கு சாதகமா? ஆமாங்க. உலகில் எங்கு போர் பதற்றம் ஏற்பட்டாலும் அதன் தாக்கம்,  தங்கத்தின் மீதும் இருக்கும்.

1. அமெரிக்கா–ஈரான் பதற்றம்.
2. மேற்கு ஆசிய மோதல்கள்.
3. ரஷ்யா–உக்ரைன் போர்.

இவை போன்ற புவிசார் அரசியல் பிரச்சனைகள் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளை தேடுவார்கள். அதில் முக்கியமான ஒன்று தங்கம். அதனால் உலகில் பதற்றம் அதிகரிக்கும்போது தங்கத்துக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே பாரத பிரதமர்  மோடி சொன்னது என்ன?

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை வைத்தார். நிலைமை சீராகும் வரை தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள் என்றார். இதற்கும் ஒரு பொருளாதார காரணம் இருக்கிறது. இந்தியா தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி, குறிப்பாக டாலர், வெளியே செல்கிறது.

அதே நேரத்தில், இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களையும் இறக்குமதி செய்கிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்தால், அதற்காக இந்தியாவுக்கு இன்னும் அதிகமான டாலர் தேவைப்படும்.
அதனால் தேவையற்ற தங்க இறக்குமதியை குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் என்பதே மோடியின் விளக்கத்தின் அடிப்படை

அதாவது.
தங்கத்தின் விலை உயர்கிறது என்பதற்காக அவசரமாக வாங்க வேண்டாம். நாட்டின் பொருளாதார சூழலையும் கருத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் அவரது வேண்டுகோள்.

ஆனால் தங்கம் திடீரென ₹10,000 வரை குறைந்தது எப்படி?
இங்கேதான் தங்கத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டும்.
தங்கம் எப்போதும் மேலே மட்டும் செல்லாது!
ஒரு கட்டத்தில் வேகமாக உயர்ந்த பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்க டாலர் வலுப்பெறலாம்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகலாம். இதனால் தங்கத்தில் விற்பனை அதிகரித்து, விலை திடீரென சரியலாம். அதனால்தான் ஒரே காலகட்டத்தில் தங்கத்தின் விலை பல ஆயிரம் ரூபாய் குறைந்ததையும் சந்தை பார்த்தது.
ஆனால்.  விலை குறைந்துவிட்டது என்பதற்காக தங்கத்தின் ஏற்றம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

ஏனென்றால், மீண்டும் உலக சந்தையில் பதற்றம் அதிகரித்தாலோ, டாலர் பலவீனமடைந்தாலோ, வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டாலோ தங்கத்தின் மீது மீண்டும் முதலீடு அதிகரிக்கலாம். இனி தங்கம் எவ்வளவு உயரும்? இதுதான் இப்போது எல்லோருடைய மிகப்பெரிய கேள்வி.
1.5 லட்சத்தைத் தாண்டிவிட்டதே. இனி ₹2 லட்சம் போகுமா?

சில சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளன. சில கணிப்புகள் 2026 இறுதிக்குள் சர்வதேச தங்க விலை $4,900/அவுன்ஸ் அளவை எட்டலாம் என தெரிவிக்கின்றன.
இன்னும் சில bullish கணிப்புகள் **$6,000-க்கும் மேலான விலையையும்  சாத்தியமான சூழ்நிலையாக பார்க்கின்றன. ஆனால் இவை உறுதியான விலை இலக்குகள் கிடையாது. ஏனென்றால் தங்கத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

1. அமெரிக்க வட்டி விகிதம்.
2. டாலர் மதிப்பு…
3. ரூபாய் மதிப்பு…
4. மத்திய வங்கிகளின் கொள்முதல்…
5. உலக அரசியல் பதற்றம்…
6. பணவீக்கம்…

இந்த காரணிகளில் ஏற்படும் மாற்றமே தங்கத்தின் அடுத்த பயணத்தை தீர்மானிக்கும்.
₹4,400-ல் தொடங்கிய தங்கத்தின் கதை.
1.     2000-ல் சுமார் **₹4,400

2.     2020-ல் சுமார் **₹48,000

3.     2025-ல் **₹80,000-ஐ கடந்தது.

2026-ல் ஒரு கட்டத்தில் 1.5 லட்சத்தைத் தாண்டியது. ஒரு காலத்தில் வீட்டின் நகைப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தங்கம். இன்று உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பை காட்டும் முக்கியமான சொத்தாக மாறிவிட்டது.

போர் வந்தாலும் தங்கம் பேசுகிறது.
டாலர் மாறினாலும் தங்கம் பேசுகிறது.
வட்டி விகிதம் மாறினாலும் தங்கம் பேசுகிறது.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கினாலும் தங்கம் பேசுகிறது. அதனால்தான்… தங்கத்தின் அடுத்த இலக்கு என்ன?” என்ற கேள்விக்கு இப்போதும் உறுதியான விடைதெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி.

இனி தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் மீண்டும் உயர்ந்தால் ஒருவரும் தங்கத்தை நாட மாட்டார்கள்.  தங்கத்தின் மீதான அபார ஆசையும் பொதுமக்களுக்கு  அத்துப்போகும், ஆனால் தங்கத் திருட்டு அதிகரிக்குமா  என்பது மக்களிடம் பீதியை கிளப்பியிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *