Today’s Gold Price:வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

Advertisements

தங்கம் விலை கடந்த 35 நாட்களில் மட்டும் பவுனுக்கு 3,520 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், அதன்பின்னர், மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவெனச் சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதைவிட அசூர வேகத்தில் விலை அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. ரூ.57 ஆயிரத்தை தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது.

கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. அதற்குப் பிறகும் விலை குறைந்தபாடில்லை. பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலும், ஓரிரு நாட்கள் லேசான இறக்கத்திலும் காணப்பட்டது. இதனால் கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாகவும் தங்கம் விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. இதன்படி நேற்று ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.59,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்கம் மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *