இன்று மகாகவி மண்ணில் உதித்த நாள் !

Advertisements

அனைவருடைய கடந்தகால பள்ளி நினைவுகளில் பாரதியார் நீக்கமற நிறைந்திருப்பார். பள்ளியில் போட்டிகளென்றாலே நினைவுக்கு வருவது பாரதிதான். ஓவியம், கவிதை, கட்டுரை, மாறுவேடமென எல்லாவற்றிலும் குழந்தைகளுக்குப் பாரதியரை எப்படியாவது பெற்றோர் புகுத்தி விடுவதுண்டு. சொல்லப்போனால்., இன்றும் மாறுவேட போட்டியென்றால் முறுக்கு மீசையோடு ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ கவிதையினை சொல்லும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் போட்டியில் கலந்துக் கொள்வதற்கும், பரிசு வாங்குவதற்கு மட்டுமா பாரதியார்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

சென்னை என்றதும் நினைவுக்கு வருவது கடற்கரை, மால்கள், தலைவர்களின் சமாதிகள் உள்ளிட்டவை தான். மெரினா கடற்கரை அமைந்துள்ள அதே கடற்கரையில் தான் ‘அச்சமில்லை… அச்சமில்லை’ எனக் கர்ஜித்த மகாகவியின் வீடு உள்ளது. சென்னையில் பாரதியார் வாழ்ந்துள்ளார் என்பதையும், அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாத பெரும்பான்மையான மக்கள் இதே சென்னையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் எதிரே அமைந்துள்ளது பாரதியின் நினைவு இல்லம். தற்போதும் பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்ததுப்போலவே பராமரித்து வருகிறது தமிழக அரசு. பக்தி கமழும் திருவல்லிக்கேணியில் வெறிச்சோடி போய் இருக்கும் இடமென்றால் அது பாரதியினுடைய நினைவு இல்லமாகத் தான் இருக்க முடியும்.

பாரதியின் வாழ்வில் மறக்கமுடியாத இடம் திருவல்லிக்கேணி. பாரதியின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் பார்த்தசாரதி கோவில் யானை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் பிரதான இடங்களில் ஒன்றாக மாறியிருக்க வேண்டிய பகுதி வெறிச்சோடி காட்சியளிப்பது வேதனைக்குரியது.

பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரமாக இருந்தாலும் இளமைக் காலத்தில் உத்திரபிரதேசம் காசி அருகில் ஹனுமான் காட் பகுதியில் வாழ்ந்து வந்தார். அங்குத் தான் சமஸ்கிருதம், இந்தியை கற்றுக்கொண்டார். பல ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து புதுச்சேரியில் சில காலங்கள் வாழ்ந்து வந்ததால் அதன் நினைவாகவே பாரதி அருங்காட்சியகம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் பெரியதாகப் பிரபலம் இல்லை. எட்டயபுரத்திலும் பாரதிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நினைவு இல்லத்தில் பாரதியின் நண்பர்கள், குடும்ப புகைப்படம் இடம் பெற்றுள்ளன. அதே போலப் பாரதி தன் தம்பி நெல்லையப்பனுக்கு எழுதிய கடிதங்களும் காட்சிப்படுத்தப்படுள்ளன. சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகை செய்திகளுமே இடம் பெற்றுள்ளது. நினைவு இல்லத்தைச் சுற்றி பார்க்கக் கட்டணம் ஏதும் கிடையாது. பாரதியின் பெருமைகளை வெறும் பெயரளவிற்கு மட்டுமே அனைவரும் பேசுகிறோம் என்பதற்கு நினைவு இல்லத்தின் வருகையே உதாரணம். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பாரதியின் புகழையும், வரலாற்றையும் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் உள்ளது.

குழந்தைகளை அழைத்து வந்து இந்த இல்லத்தைச் சுற்றி காண்பித்து பாரதி போன்ற ஆளுமைகளைக் கொண்டு செல்வதின் மூலமாக நமக்கு முந்தைய பல தலைமுறைகளின் தியாகங்களையும், வீரத்தையும் கொண்டு செல்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *