Armstrong murder case: ஆற்காடு சுரேசின் மனைவி கைது!

ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேசின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என ஆற்காடு சுரேசின் உறவினர்கள் கருதி வந்தனர். இந்நிலையில், ஆர்காடு சுரேசின் பிறந்தநாளான கடந்த ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் சகோதரர் பொன்னை பாலு உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல ரவுடிக் கும்பல்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிறகு ஆற்காடு சுரேஷ் பாணியில் அவருடைய குடும்பத்தினரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆற்காடு சுரேசின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக, ஆற்காடு அடுத்த பொன்னி கிராமத்திற்குக் குடும்பத்தினர்கள் வருவார்கள் என்பதால் ஆந்திர எல்லையோரக் கிராமங்களில் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருந்தனர்.

இந்த சூழலில் ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேசின் மனைவி பொற்கொடியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலைத் திட்டத்துக்கான சதியில் அவருக்கு பங்கு இருக்கிறதா, பண உதவி செய்தாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பொன்னை பாலுவுக்கு ஆற்காடு சுரேசின் மனைவி பொற்கொடி ரூ.1.5 லட்சம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பொற்கொடிக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது பிடிபட்ட பொற்கொடியையும் சேர்த்து 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *