மக்களவையில் அனல் பறக்கும் அரசியல்..!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அறிவிக்கையில் பல குறைகள் உள்ளதால், அதைச் சரிசெய்து மீண்டும் தந்தால், பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுவதற்கு எழும்போதெல்லாம் அவைத் தலைவர் ஓம் பிர்லா அவரைப் பேச விடாமல் அனுமதி மறுத்து விட்டார். அதேபோல அரசுக்கு எதிராக முழக்கமிட்டு அவையின் நடுவே வந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூட்டத்தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்துவிட்டார். பிரதமரைத் தாக்க காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்பட்டதாகவும் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கையொப்பமிட்ட அறிவிக்கையை வழங்கினர். அந்த அதில், குறிப்பிட்ட நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததாக நான்கு முறை குறிப்பிட்டுள்ளது. குறைகள் நிறைந்த அந்த அறிவிக்கையைத் திருத்தி மேல்நடவடிக்கைகளைத் தொடரும்படி மக்களவைச் செயலகத்துக்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் அறிவிக்கையில் உள்ள தவறுகளைத் திருத்தித் தந்தால் மார்ச் ஒன்பதாம் நாள் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் உரிய விதிகளின்படி அதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *