300 புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Advertisements

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 7 கோட்டங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 பேருந்துகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம் கோட்டங்கள், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளைத் தொடக்கி வைக்கும் விழா ஜூன் 23ஆம் நாள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஜூன் 22ஆம் நாளே அந்தந்தக் கோட்டங்களில் இருந்து புதிய பேருந்துகளில் டீசல் நிரப்பி ஆள் ஏற்றாமல் சென்னைக்குக் கொண்டுவந்தனர். தொலைவில் இருந்து வந்த ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு ஓட்டுநர்கள், ஒரு நடத்துநர் என மொத்தம் 900  தொழிலாளர்கள் வந்திருந்தனர். இவர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடக்கி வைக்கும் விழாவுக்காகக் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் காத்துக்கிடந்தனர்.

முதலமைச்சரின் வருகைக்காக 300 பேருந்துகளும், 900 தொழிலாளர்களும் காலநேரமின்றிக் காத்துக் கிடந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமன்றக் கூட்டம், பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்தபின் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாள் கழித்து இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தொடக்க விழா நடைபெற்றது

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.  புதிய பேருந்துகளைத் தொடக்கி வைத்தபின் பெரம்பூருக்குச் செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

அந்தப் பேருந்தில் முதலமைச்சர் விஜய், போக்குவரத்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆகியோர் பயணம் செய்தனர். புதிய பேருந்தில் பணம் கொடுத்துப் பயணச்சீட்டு எடுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சொந்தத்  தொகுதியான பெரம்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அது மட்டுமில்லாமல் திமுக ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்னும் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதுடன் அந்தப் பெயரை ஸ்டிக்கர் மூலம் ஒட்டினர்.

இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைத் தவிர மற்ற கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *