திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு மராமத்து பணி!அமைச்சர்கள் சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர் !

Advertisements

திருத்தணி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (21.07.2023) திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருக்கோயில் சார்பில் கட்டப்படும் இளைப்பாறும் மண்டப கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததோடு, சிறப்பு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ள தணிகை இல்ல குடில்கள் மற்றும் அன்னதானக் கூடத்தை திறந்து வைத்தனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆடிக் கிருத்திகை திருவிழா 07.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து அமைச்சர் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திருக்கோயில் வளாகத்தில் ஆடிக் கிருத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை நினைவு மண்டபம், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் தணிகை இல்ல வளாகத்தில் புதிய குடில் கட்டுதல், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் 3 நிழல் மண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டிதோடு, தணிகை இல்ல வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குடில்களையும், விரிவுப்படுத்தப்பட்டுள்ள. புதிய அன்னதானக் கூடத்தையும் திறந்து வைத்து, மலைக் கோயிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ள பேட்டரி கார்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

பின்னர், தெக்களூர் நீரேற்று நிலையத்தில் 500 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள், திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் இத்திருக்கோயிலின் உபகோயிலான சோளீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினையும் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ. முரளீதரன், இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்.ஆல்பி ஜான் வர்கீஸ்., இ.ஆ.ப., இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ந.திருமகள், அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், வேலூர் மண்டல இணை ஆணையர் க.ரமணி, திருத்தணி நகர் மன்ற தலைவர்.சரஸ்வதி பூபதி, திருக்கோயில் துணை ஆணையர் விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *